வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மகிந்தவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கில் ராஜபக்ச குடும்பத்துக்கு தனி மரியாதை உண்டு. தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த புலிகளை நாம் தோற்கடித்தோம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை மீட்டெடுத்தோம். இதனை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.
புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் எமக்கான ஆதரவு பெருமளவில் உள்ளது.போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ராஜபக்சவின் ஆட்சியில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
தற்போதைய ஆட்சியின்போது அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை. அவர்களின் மனதில் நாம் என்றும் உத்தம புருஷர்களாக இருக்கின்றோம் என்றார்.