அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டு கே.ஏ.செங்கோட்டையன் நியமனம்
அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கே.ஏ.செங்கோட்டையன் அப்பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்ற மதுசூதனன் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இதுபற்றி நிருபர்களிடம் மதுசூதனன் கூறும்போது, ‘‘அதிமுக தற்போது சர்வாதிகாரிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட மாபெரும் இயக்கமான அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்பதை மக்கள் விரும்பவில்லை. அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. எனவே, அதிமுக தலை மைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும்.
அதிமுகவை சர்வாதிகாரிகளிடம் இருந்து மீட்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும். யாருடைய நிர்பந்தமும் இன்றி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். அதிமுகவினர் சசிகலாவை நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ல் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டிருக்கிறார்.