லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 08:20 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாத செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நிகழாண்டு நான்காவது முறையாக பயங்கரவாத தாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஈடி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக லண்டன் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தை லண்டன் நகர போலீசார், பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸ், ஸ்காட்லாந்து யார்டு படையினர் இணைந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் யாரும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு வரவேண்டாம் என்று பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் லண்டனில் மூன்று முறை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 36 பேர் பலியாகியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=2_gRG7Llb8M