Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / தீவிரவாதத் தாக்குதல்களால் பீதியில் உறைந்தது லண்டன்! 7 பேர் பலி; 48 பேர் படுகாயம்!!

தீவிரவாதத் தாக்குதல்களால் பீதியில் உறைந்தது லண்டன்! 7 பேர் பலி; 48 பேர் படுகாயம்!!

  • தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொலை
  • நகரமெங்கும் உச்சக்கட்டப் பாதுகாப்பு
  • உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்

பிரிட்டனின் தலைநகரான லண்டனில் நேற்றுமுன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர் தீவிரவாதத் தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று மாத காலப்பகுதியில் பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பதுடன் பொதுத்தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றுமுன்தினம் இரவு 10.08 மணியளவில் மத்திய லண்டன் பகுதியிலுள்ள லண்டன் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வாகனம் ஒன்றால் மோதச்செய்த முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து மத்திய லண்டனிலுள்ள பரோ சந்தைப் பகுதியில் கத்திவெட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் வாள் போன்ற கத்திகளால் பலரின் கழுத்தை அறுத்துள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் 7 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவங்களையடுத்து, அங்கு விரைந்த பொலிஸாரால் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதில் தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1.23 மணிக்கும், 1.28 மணிக்குமிடையில் பரோ சந்தைப் பகுதியில் மூன்று பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டன. தொடர் தாக்குதல்களால் லண்டனில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தெரெசா மே தலைமையில் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றது. லண்டன் நகரம் முழுவதும் பீதியில் உறைந்துள்ளது.

அதேவேளை, லண்டனில் இடம்பெற்ற தாக்குதல்களால் இலங்கை அணி வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சம்பியன் ட்ராபி தொடருக்காக அந்த நாட்டுக்குச் சென்றுள்ள அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் குறித்து பாதுகாப்புப் பகுப்பாய்வு, அறிக்கையொன்றை வழங்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, லண்டனில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

“லண்டன் மற்றும் பிரிட்டனுக்கு அமெரிக்காவால் என்ன உதவிகளைச் செய்யமுடியுமோ அதை நிச்சயமாகச் செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டு தற்போது விசாரணையை எதிர்கொண்டுவரும் ஆறு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த பயணத்தடையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக லண்டன் பக்கம் பிரான்ஸ் உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

“இந்தப் புதிய துயரத்தை எதிர்கொண்டுள்ள பிரிட்டனின் தரப்பில் முன்னெப்போதும் இல்லாததைவிட பிரான்ஸ் உடனிருக்கும். என்னுடைய எண்ணங்கள் தாக்குதலில் பலியானவர்களுக்கும், அவர்களுடைய அன்புக்குரியவர்களுக்கும் சென்றடையட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், லண்டன் தாக்குதல் சம்பவத்தில் இரு பிரான்ஸ் பிரஜைகள் காயமடைந்திருக்கின்றனர் எனவும், அதில் ஒருவர் மோசமாகக் காயமடைந்திருக்கின்றார் எனவும் கூறியுள்ளது.

“ஜேர்மனியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். தீவிரவாதத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக ஜேர்மனி தொடர்ந்து சண்டையிடும். பிரிட்டன் பக்கம் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று செய்திக்குறிப்பொன்றில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.

“லண்டனிலிருந்து மோசமான செய்தி வந்துள்ளது. நிலைமையை நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம்” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“லண்டனில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு எங்களுடைய பிரார்த்தனைகளும், உறுதியான ஒற்றுமையும் இன்றும் எப்போதும் இருக்கும்” என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ர்ன்புல் தெரிவித்துள்ளார்.

“நியூஸிலாந்தின் எண்ணங்கள் லண்டன் தாக்குதலில் பலியானவர்களுடன் இருக்கும்” என்று நியூஸிலாந்து பிரதமர் பில் இங்கிலிஷ் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv