கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் அவசர கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இரு வாரங்களுக்குள் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முள்ளிக்குளம் மக்கள் இன்று முதல் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியும் என கடற்படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
முள்ளிக்குளம் மக்கள் நாளை முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.