Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு காணி விவகாரம்: பேச்சுக்கு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு

கேப்பாப்பிலவு காணி விவகாரம்: பேச்சுக்கு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு

கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் படைத்தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பின் தலைவர் நடத்திய பேச்சுகளின்போது ஜூன் மாத இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டது. அது பின்னர் நிறைவேற்றப்படவில்லை.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் மிகக் காட்டமான கடிதம் ஜூலை மாத இறுதியில் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் செயலரால் உறுதி வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன் பின்னரும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், கேப்பாப்பிலவு விடயம் தொடர்பில் இறுதியான  தீர்க்கமான முடிவு எடுப்பதற்காக  ஜனாதிபதியுடன் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவேன் என்று கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதியால் இரா.சம்பந்தனுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv