சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம்.
புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்தியா நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பும், கோலியின் தலைமைத்துவத்தின் மீது தனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய அணி கடந்த 10 மாதங்களாக சிறப்பாகத் திகழ்ந்தது. அனைத்தையும் வென்றனர். ஆனால் இப்போது மீண்டு வந்து கடினமாக ஆட வ்ண்டும். உள்நாட்டிலும் தோற்கடிக்கப்படலாம், பல அணிகளுக்கு இது நடந்துள்ளது. இடைவெளிக்குப் பிறகு பெங்களூருக்கு நல்ல தன்னம்பிக்கையுடன் வர வேண்டும்.
இந்திய அணி கவலைப்படவேண்டியதில்ல, அஸ்வின், ஜடேஜா இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள். உமேஷ் யாதவ் சிறப்பாகவ் வீசி வருகிறா, இந்திய அணிக்கு இப்போது தேவை தன்னம்பிகை, மேலும் டீ.ஆர்.எஸ் முறையை இன்னும் சிறப்பாக பயன்படுத்துவது அவசியம்.
கோலி மனிதர்தான் அவரும் பேட்டிங்கில் தோல்வியடைவார். புனேயில் இரு இன்னிங்ஸ்களிலும் அவர் சரியாக ஆடவில்லை, முதல் இன்னிங்சில் தளர்வான ஷாட்டில் அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 441 இலக்கு எனும்போதே முடிவாகி விட்டது அப்போது இறங்கினார் கோலி.
கோலி நிச்சயம் பதிலடி கொடுப்பர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது ஆட்டம் நம்பமுடியாதது. ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு எதிராக 4 டெஸ்ட் சதங்களை எடுத்தது நம்ப முடியாத ஆட்டம், சச்சின் டெண்டுல்கர் கூட இதனைச் செய்து நான் பார்த்ததில்லை. அதுவும் 2-வது முறையாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற போதே 4 சதங்கள் என்பது பெரிய பேட்ஸ்மென்களும் சாதிக்காதது.
தோற்ற பிறகு அவர் செய்தியாளர்களை எதிர்கொண்ட நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, அங்கு அவர் எதையும் மறைக்கவில்லை, கேட்ச்கள் விட்டது முதல் சரியாக ஆடாதது வரை அனைத்தையும் வெளிப்படையாகவே கூறினார்.
கோலியின் தலைமைத்துவத்தில் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது, அவர் நேர்மையானவர், அணிக்கு அவர் அளித்துள்ல செய்தி மிகத்தெளிவானது.
இத்தகைய பிட்ச்களை (புனே) தயாரிக்கும் போது, பிட்ச் தயாரிப்பாளரே திருப்தியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். இத்தகைய பிட்ச்களில் சராசரி பவுலர் கூட விக்கெட் வாய்ப்புகளைப் பெறுவார்கள், நான் ஓகீஃபின் சாதனையை சிறுமைப்படுத்தவில்லை.
அவர் விக்கெட் வீழ்த்தும் பவுலரானார், இதனை அவர் பேட்டிங் பிட்சில் செய்ய முடியாது, இந்தியா உண்மையான, நல்ல பிட்ச்களைத் தயாரிக்க வேண்டும்” என்றார் கங்குலி.