விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). கடந்த மாதம் 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த இவரை 2 பெண்கள் ‘விஎக்ஸ்’ என்ற கொடிய ரசாயனத்தை பயன்படுத்தி படுகொலை செய்தனர். இந்த ரசாயனம் ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டதாகும்.
கிம் ஜாங் நாம் கொலை தொடர்பாக வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் (28), இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா (25), அவரது மலேசிய காதலர் பாரித் பின் ஜலாலுதீன் மற்றும் வடகொரியாவை சேர்ந்த ரி ஜாங் கோல் (46) ஆகியோரை மலேசிய போலீசார் கைது செய்து உள்ளனர்.
இவர்களில் ரி ஜாங் கோல் என்பவரை மலேசியா இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிப்பதாக அறிவித்து உள்ளது. இந்த கொலையில் அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுவதாக அட்டார்னி ஜெனரல் முகமது அபாண்டி அலி தெரிவித்தார். இருப்பினும் அவரிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாததால் அவர் இன்று நாடு கடத்தப்படுகிறார்.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட விஎக்ஸ் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி கொலை செய்ததற்கு மலேசிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மலேசிய அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘எவ்விதமான நோக்கத்திலும், எந்த சூழ்நிலையிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களில் இதைப்போன்ற அபாயகரமான நச்சு ரசாயனத்தை பயன்படுத்தப்படுவதை இந்த அரசு வன்மையாக கண்டிக்கிறது.
இதைப்போன்ற ஆபத்தான ரசாயனங்களை மலேசியா தயாரிப்பது கிடையாது. இறக்குமதி செய்து நாங்கள் சேமித்து வைப்பதும் இல்லை. நெதர்லாந்தில் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் மீதான தடையை கண்காணித்து வரும் அமைப்பிடம் இது, தொடர்பாக ஆண்டுதோறும் முறையான அறிக்கையை மலேசிய அரசு தாக்கல் செய்து வருகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.