கிம் ஜாங்-நம் , நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் – புதிய தகவல்
வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நம், மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட வி.எக்ஸ் என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால்தான் உயிரிழந்திருக்கிறார் என மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம் தெரிவித்திருக்கிறார்.
அந்த ரசாயனம் வீரியம் மிக்கதாக இருந்ததால், எந்த ஒரு எதிர்வினை மருந்தும் பயனளித்திருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் பதிவு மண்டபத்தில் இரு பெண்கள் குறுகிய நேரத்துக்கு கிம்மை சந்தித்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
தொலைக்காட்சி கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிப்பதாக தாங்கள் நினைத்ததாக அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.
இன்னொரு புறம், அந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று வடகொரியா மறுத்துள்ளது.
விஎக்ஸ் என்ற ரசாயனம், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதம் என்று ஐ.நா. மன்றம் வகைப்படுத்தியுள்ளது. மனிதர்களின் தோலில் பட்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்படும்.
கைது செய்யப்பட்ட இரண்டு இந்தோனீஷிய பெண்களில் ஒருவரான சிட்டி அய்ஷ்யா (25), தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்காக என்று நம்பி, குழந்தைகளுக்கான எண்ணெய் என்று கூறி தன்னிடம் கொடுக்கப்பட்ட திரவத்தை கிம்மின் முகத்தில் பூசியதாகத் தெரிவித்தார். இதற்காக, சுமார் 400 மலேசியன் ரிங்கிட் அல்லது 72 பிரிட்டன் பவுண்டுகள் தனக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.