தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
திடீர் சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு இன்று 11ஆவது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்வதே இந்த ரத்த தட்டணுக்கள்தான்.
கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7ஆவது அறிக்கை மூலம் தெரியவரும்.