சிவகங்கை மாவட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் தொல்பொருள் ஆய்வுகளை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக. மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் இணைந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகேஷ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள்துறை ஆய்வு பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். இந்திய தொல்பொருள் ஆய்வுமையத்தின் பெங்களூரு கிளை 2013-14 களிலேயே கீழடி பண்பாட்டுத் தொன்மங்கள் நிறைந்த பகுதி என்பதைக் கண்டறிந்து அதற்கான ஆய்வுக்குத் தயாரானது. பெங்களூரு கிளையின் பரிந்துரைக்கு தேசிய தொல்பொருள்துறை இயக்குனரின் அனுமதி கிடைத்தபின் 2014-15 கால கட்டத்தில் முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஆய்வுக்கு 2015-16 கால கட்டத்திலும் அனுமதி தரப்பட்டது.
கீழடி மதுரை மாநகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வைகை நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. தொன்மச் சின்னங்கள் புதைந்த பகுதியாக கருதப்படும் பகுதி சுமார் 110 ஏக்கர் பரப்பில் நாலரை கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கிறது.
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற அரிய பொருட்கள் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற இடங்களில் கிடைத்தவற்றோடு ஒத்துப்போகிறது. இந்த வகையில் கீழடி பெரும் முக்கியத்துவமும் கவனமும் பெறுகிறது. தமிழர்களின் வணிகத் தொடர்பு கடல் கடந்து வெளிநாடுகளுடன் நடந்ததையும் இந்த ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இதுவரை கீழடியில் நடந்த ஆய்வுகளில் சுமார் ஏழாயிரம் தொன்மை நிறைந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தொல்பொருள்துறை ஆய்வு மையங்களுக்கு தொல் பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் வழங்கப்படும். ஆனால் கீழடியில் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை மத்திய தொல்பொருள் ஆய்வு மையம் இன்னமும் வழங்கவில்லை. அதற்கான காரணமும் தெரியப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே இந்திய தொல்பொருள் ஆய்வு மையமானது நாகார்ஜுன கொண்டா, காளிபங்கன், லோதல், தோளவிரா போன்ற இடங்களில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்திட அனுமதி வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் கீழடியிலும் அடுத்தகட்ட ஆய்வுப் பணியைத் தொடர தொல்பொருள் ஆய்வு மையம் அனுமதி வழங்கிட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொன்மை நிறைந்த வரலாற்றை எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்ல முடியும். எனவே கீழடி பகுதியில் அடுத்த கட்ட தொல்பொருள் ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கடித்தில் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இது தொடர்பாக டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பியபோது அதிமுக, திமுக மற்றும் பாஜக உட்பட தமிழக உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளித்திருந்தனர்.