தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த கோர சம்பவம் குறித்து தமிழக அரசிற்கு ஏராளமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
# யார் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது?
# துப்பாக்கி சூட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?
# துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும் குண்டுகளின் விவரங்களும் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை?
# இறுதியாக துப்பாக்கி சூடு நடைபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தவில்லை?
# துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?
# இரண்டாம் நாளில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழுவிவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?
இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு இதுவரை விடை அளிக்கவோ, விளக்கம் அளிக்கவோ இல்லை.
தூத்துக்குடி வாழ் சகோதர, சகோதரிகளின் தோளோடு தோள் நின்று இந்த துயர சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதி பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.