“சர்வதேச சமூகத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், நாம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து தளர்ந்துபோய்விடவில்லை. ஐ.நா. தீர்மானத்தை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னை சந்தித்த அமெரிக்கக் காங்கிரஸ் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-
“போரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றுவதில் அமெரிக்காவே மும்முரமாக நின்றது. அமெரிக்கா அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தும் இருந்தது. இறுதியில் இலங்கை அரசையும் இணை அனுசரணை வழங்கச்செய்து அதனை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தின் ஊடாக சர்வதேச சமூகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதற்காக அது தளர்ந்துபோய்விடவும் இல்லை.
இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கிக்கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம். நாம் எதிர்பார்த்த கருமங்கள் நடைபெறவில்லை. சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனைச் செய்விக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துத்தான் இந்த அரசு ஆட்சியமைத்தது. வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. காணி விடுவிப்பில் கொஞ்சக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பெருமளவு காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே உள்ளன.
தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைக்குள் வாடுகின்றனர். அவர்களின் விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சர்வதேச சமூகம் இந்த விடயங்களிலும் கூடுதல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
புதிய அரசமைப்பு உருவாக்க விடயம் ஆரம்பத்தில் வேகமாக இடம்பெற்றாலும் மந்தகதியிலேயே இப்போது நடக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த வாரம் சந்தித்தபோதுகூட இதனைப் பற்றிக் கூறியிருந்தேன்.
புதிய அரசமைப்பு ஊடாக நிரந்தரத் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று அமெரிக்கக் காங்கிரஸ் அலுவலர்களிடம் கூறினேன்” – என்றார்.