Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.”

– இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் உரிய முறையில் வழக்குத்தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக – முதலில் விபத்தினாலேயே மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறிய நிலையில் – 5 பொலிஸாரைக் கைது செய்து – அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்ட நிலையில் – மேல் நீதிமன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாதமையால் மாணவர்களின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அவ்வாறெனில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பாரானால் அம்மாணவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள் என்பது
உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இவ்விரு மாணவர்களின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி 25.10.2016 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடைபெறும் என ஆளுநரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் அதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, உடனடியாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருமாணவர்களின் மரணம்
தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்” – என்றுள்ளது.

குற்றத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv