யாழ்ப்பாணத்தில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டுவந்த கணவன், மனைவி ஆகியேரை இன்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவவையடுத்து, யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு சுற்றிவளைத்த போதே குறித்த இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய கணவனும், 19 வயதுடைய மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் , போலிநாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய இரு அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர் இயந்திரம், மடிக்கணினி, 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 400 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் 148 ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போலிநாணயத்தாள்களில் பெறுமதி 2.06 மில்லியன் ரூபாவென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் போலி நாணயத்தாள்களை அச்சிடும் குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, போலிநாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் போலி நாணயத்தாள்கள் ஏதேனும் கிடைக்குமாகவிருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.