ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினரின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்துள்ளார்.
இதன் விளைவாகவே அண்மையில் ஆட்சிமாற்றத்தினைக் கொண்டு வரமுயற்சித்தார். ஆனாலும் அந்த முயற்சி ஐக்கிய தேசியக் கட்சியினால் தோற்கடிக்கப்பட்டது.
இன்று நாடு பாரிய அரசியல் குழப்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தற்போதைய ஆட்சியாளர்களே காரணமென அனைவருக்கும் தெளிவாகவே தெரியும்.
இந்த நிலைமைகளினால் நாட்டினது பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.