முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் படையினரிடம் உள்ள நிலம் தொடர்பில் படையினரால் மாறுபட்ட புள்ளிவிவரங்கள் கூறப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரிடம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக இராணுவத்தினரால் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தரவில் உண்மை கிடையாது. ஏனெனில், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் 2015- ஆம் ஆண்டு -தரவுகளின் பிரகாரம் புதுக்குடியிருப்பில் ஆயிரத்து 152 ஏக்கர் நிலம் இராணுவம் வசம் உள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டதன் பின்னர் பிரிவில் நூறு ஏக்கர் நிலம்கூட விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் எவ்வாறு குறித்த அளவு 200 ஏக்கராக மாற்றம் பெற்றது என்பதை அறிய இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளின் விவரத்தை அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது – என்றார்.