ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரின் கிழக்கு பகுதியை ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது.
அதைத் தொடர்ந்து மேற்கு பகுதியையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தங்கள் வசப்படுத்துவதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.
இந்த சண்டை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. ஈராக் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி மேற்கு மொசூலில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை ராணுவம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அங்கு 3 கிராமங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை மத்திய போலீஸ் தலைவர் சாகர் ஜாவ்தத் தெரிவித்தார். தற்போது போலீஸ் படை, ஹராமத் பகுதியை முற்றுகையிட்டு வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையே அங்குள்ள ஜாஞ்ஜிலி மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஹசன் கோமா உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.