Friday , November 15 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி

கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி

கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ஹார்வி புயலால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் தற்போது உருவாகியுள்ள இர்மா சூறாவளி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கரீபியன் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் சுயாட்சி பெற்ற போர்ட்டோரிகா, அன்டிகுவா-பர்புடா நாட்டில் பர்புடா தீவுகள், பிரான்ஸுக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவு, பிரிட்டனுக்கு சொந்தமான பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளை இர்மா சூறாவளி 95 சதவீதம் அழித்துள்ளது. இதில் பல தீவுகள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. போர்ட்டோரிகோ, பர்புடா தீவுகளில் மின் விநியோகத்தை சீரமைக்க குறைந்தது 3 மாதங்களுக்கு மேலாகும் ஆகும் என்று பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இர்மா சூறாவளிக்கு இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

தற்போது இர்மா புயல், கியூபா மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா மாகாணத்தில் 2 அணுமின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே அட்லாண்டிக் கடலில் ஜோஸ், கதியா என்ற 2 புதிய சூறாவளி புயல்கள் உருவாகி உள்ளன. இதில் கதியா சூறாவளி வெள்ளிக்கிழமை இரவு மெக்ஸிகோவை தாக்கும். ஜோஸ் சூறாவளி கரீபியன் தீவு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …