சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை
சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை கடந்த வாரம் ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கடலில் இருந்து ஏவப்படும் ‘ஹோமுஸ் 2’ என்ற இந்த ஏவுகணை சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் வானில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் நாட்டு விமானப் படை தளபதி ஜெனரல் அமிர் அலி ஹாஜிஸாதே குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் மத்தியில் உள்ள பாலைவனப் பகுதியில் கடந்த மாதம் ஈரான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்ட போதும் பல்வேறு வகையான ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.