வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு அந்தக் கட்சிக்குள்ளேயேஎதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அந்தக் கட்சியினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் எழுந்த சர்ச்சையில், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பா.டெனீஸ்வரன் கையெழுத்திட்டார் . அதனால் அவரைத் தமது கட்சியிலிருந்து விலக்குவதாக ரெலோ அமைப்புத் தெரிவித்திருந்தது.
கடந்த 13ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இது தொடர்பான கடிதத்தை அந்த அமைப்பு அனுப்பியிருந்தது. அதற்கு அன்றைய தினமே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் அனுப்பியிருந்தார். ரெலோ அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தார்.
விந்தனா? சிவாஜிலிங்கமா?
அமைச்சரவையில் ரெலோவின் சார்பில் ஏற்படும் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அந்தக் கட்சி வவுனியாவில் நேற்றுமுன்தினம் கூடி ஆராய்ந்தது. அந்தக் கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் பெயரைப் புதிய அமைச்சராகப் பிரேரித்துள்ளார். இதற்குக் கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஞா.குணசீலன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட முக்கியமானவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.குணசீலன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் எம்.கே.சிவாஜிலிங்கத்தைத்தான் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். சிவாஜிலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனையும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விந்தனே அமைச்சர்
இதேவேளை, ரெலோ அமைப்பினால் ஊடக அறிக்கைகள் வழமையாக அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து நேற்று மதியம் மின்னஞ்சல் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில், விந்தன் கனகரட்ணத்தையே அமைச்சராகத் தமது கட்சி முதலமைச்சருக்குப் பிரேரிக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றுதான் முடிவு
ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, இது தொடர்பில் கட்சி இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பதிலளித்தார். கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தாவிடம் கேட்டபோது, “எமது கட்சியின் முடிவு மாறலாம்” என்றார். மின்னஞ்சலில் விந்தனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “நாம் முதலமைச்சரிடம் இன்று செவ்வாய்க்கிழமை பெயர் பரிந்துரைத்த பின்னர்தான் ஊடகங்களுக்கு வெளியிடுவோம்” – என்றார்.