நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
ரஜினியின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்து முதல்வர் ஆகும் கனவில் இருக்கும் ரஜினிகாந்துக்கு 27 வருடங்களாக தமிழகம் முழுவதும் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ள இந்த ஏழு பேர் பற்றிய வழக்கு விவரங்கள் கூட தெரியாதா?. இதுகூட தெரியாமல் எப்படி தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்? என சமூக வலைதளங்களில் சரமாரியாகக் கேள்விகள் எழுந்துள்ளன.
ரஜினியின் இந்த பதிலுக்கு நடிகை கஸ்தூரி தற்போது எதிர் வினையாற்றி இருக்கிறார். தனது டிவிட்டரில் இது குறித்து ‘ 20 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழும் ஒருவர் எப்படி ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்ட 7 பேரைப் பற்றி தெரியாமல் இருக்க முடியும். நடிகர் ரஜினி நல்ல மனது உடையவராக இருக்கலாம். ஆனால் அவர் தமிழகப் பிரச்சனைகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒன்றும் அறியாமை இல்லை. அறிய மறுப்பது’ என கடுமையாகக் கூறியுள்ளார்.