இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி
2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏனைய பணத்தொகை தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இவற்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் தன்வசப்படுத்திக்கொண்ட சிலர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு வரவேண்டிய பணத்தை கொள்ளையடித்துள்ளதாகவும், இதனால் இலங்கை கிரிக்கெட் சபையும் வீரர்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய தொடரொன்று இடம்பெற்ற போது சில தவறுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அப்போது கிரிக்கெட் சபையில் இருந்து தன்னை நீக்கிவிட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே இந்திய சுற்றுபயணம் நடத்தப்பட்டதாகவும், இந்த தொடரில் அதிகளவிலான தொகை எமக்கு இல்லமால் போனதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் தொடரில் குறைந்த பட்சம் 14-15 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வரவேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆனால் இந்த தொடர் குறித்த உடன்படிக்கையில் எமக்கு 6.6 மில்லியன் டொலர்கள் என்ற உடன்படிக்கையே செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கிடைத்தது 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே என்றும், ஏனைய தொகை என்னவானது, இதனை யார் கையாண்டது என்ற இந்த ஊழல்கள் அனைத்தையும் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமாக விளையாட்டுத்துறை அமைச்சர்கள் செயற்பட்டும், குற்றவாளிகள் பலர் குறித்து தெரிந்தும் எவரும் குற்றவாளிகளை தண்டிக்க முன்வரவில்லை எனவும் கூறிய அமைச்சர் , இப்போதாவது இதனை கொண்டுவந்து விளையாட்டை நேர்த்தியாகக வேண்டும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.