Sunday , November 17 2024
Home / முக்கிய செய்திகள் / இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்

இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்

“ஊடக சுதந்திரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்.

‘”இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தி அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் ‘உதயன்’ பத்திரிகையில் ஏன் எழுதுகிறீர்கள் என்று மிரட்டுகின்றார்கள். எமது பத்திரிகையில் எழுதினார் என்பதற்காகவே ஒருவரின் கலாநிதிப் படிப்பைப் பாழ்படுத்தியிருக்கிறார்கள். அவர் தனது கலாநிதிப் படிப்பைப் பூர்த்தி செய்யச் செல்வதற்கு விசா வழங்க மறுத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஊடகத்தின் சுதந்திரத்தை முறைமுகமாகக் கட்டுப்படுத்தப்பார்க்கிறார்கள்.அவர்களின் செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமலுள்ளது” என்றார் அவர்.

“இங்கிருக்கும் அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதற்காக இந்தியாவை நாம் எதிர்கின்றோம்; வெறுக்கிறோம் என்று அர்த்தமல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.

“தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான பங்கை ஆற்றவேண்டியிருக்கின்றது” என்று குறிப்பிட்ட அவர், “யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா மீதான வெறுப்பையும் விரோதத்தையும்தான் வளர்க்கும்” என்றும் குறிப்பிட்டார்.

உதயன் படுகொலை

உலக ஊடக சுதந்திர தினம் இன்று உலக நாடுகள் எங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. 2006ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்திரதினத்திற்கு ஒரு இரவு முன்னதாக, மே மாதம் 2ஆம் திகதி இரவு ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை நினைவுகூரும் வகையில் ‘வேட்கை’ என்ற பெயரில் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை தின நிகழ்வு ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், பத்திரிகை பணியாளர்கள் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது ஊடகவியலாளா்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அரசினால் இப்போதுதான் சில காய்நகர்த்தல்கள் செய்யப்படுவதாகத் தெரிகின்றது. பல வழிகளிலும் இருந்துதொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்குதல்களால் இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது. எனினும், எவ்வளவு தூரம் நேர்மையாக இந்தப் பிரச்சினையை அவர்கள் கையாள்கிறார்களோ தெரியாது.

தெற்கில் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை போன்ற சில சம்பவங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் இன்னும் ஒரு காத்திரமான கட்டத்தை அடையவில்லை. எனவே, எமது சம்பவங்கள் மீதான விசாரணைகளுக்கும் என்ன நடக்கும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எமது முன்னாள் செய்தி ஆசிரியர் க.குகநாதனைப் படுகொலை செய்ய முயற்சித்தார்கள். 2006ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியவர்கள் அவரைக் கொலைசெய்வதற்காகத் தேடித் திரிந்தார்கள். தெய்வாதீனமாக அவர் தப்பித்தார். இரண்டாம் தடவை 2011ஆம் ஆண்டு அவரை மீண்டும் கொல்ல முயற்சித்தார்கள். அந்தச் சம்பவம் நடந்து ஒரு கிழமையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொன்னா், இந்தச் சம்பவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று. பின்னா் சம்பந்தப்பட்டவர் யார் என்பதைச் சூசமாகத் தெரிவித்தாா்கள். அவர் ஒரு சட்டத்தரணி. இன்றும் தொழில் செய்துவரும் சட்டத்தரணி. ஆனால், அவர் கைதுசெய்யப்படவும் இல்லை; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. அடுத்த தேர்தலில் அவர் மஹிந்தவின் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தேசிய அரசாலும்
பயனில்லை

நாங்கள் கடுமையாக முயன்று இந்த விடயம் சட்டமா அதிபா் திணைக்களம் வரைக்கும் வந்துள்ளது. பலரும் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இதுவரையும் நடவடிக்கை இல்லை. 2006ஆம் நடத்தப்பட்ட படுகொலை குறித்தும் பொலிஸாருக்கு சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் நடவடிக்கை எதுவும் இல்லை.

இன்றைய தேசிய அரசு பதவியேற்ற பின்னர் அவர்களாலும் இதுவரையும் எதனையும் செய்யமுடியவில்லை. மாறாக நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த மே தினப் பேரணியில் மஹிந்த ஆட்சிக்கு வலுச்சோ்க்கும் மாதிரி மக்கள் அங்கு குவிந்துள்ளார்கள்.

‘உதயன்’ படுகொலைகள் தொடா்பாக இந்த வருடம் விசாரணைக்கு எடுப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த மே மாதத்துக்கு இடையில் ஏதாவது மாற்றங்கள் தென்படுகின்றதா என்று பாா்ப்போம். தற்போது நேரடியாக தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் மறைமுகமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

இந்தியத் தலையீடு

இப்போ மறைமுகமாக அண்டை நாடு கொஞ்சம் தலையிடுகின்றது. முன்னரும் தலையிட்டவா்கள்தான் அவர்கள். தற்போது எமது பத்திரிகையில் இந்தியாவைப் பற்றி எதிர்மறையாக எதுவும் வரக்கூடாது என்று சொல்கின்றாா்கள். இந்தியக் கலைஞர்களை இங்கு அழைத்து வருவது குறித்து எமது பத்திரிகையில் தனது கருத்தைத் தெரிவித்ததற்காக ஒருவருக்கு இந்தியா செல்லும் விசா வழங்க மறுத்திருக்கிறார்கள். உள்ளூா்க் கலைஞா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றுதான் அவர் கூறியிருந்தார். அது இவர்களுக்குச் சுடுகின்றது.

‘உதயன்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார் என்பதற்காக ஒருவரின் கலாநிதிப் படிப்பைப் பாழ்படுத்தியிருக்கின்றார்கள். அவர் தனது ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகத்தில் முன்வைக்கவேண்டிய தருணத்தில் அவருக்கு விசா வழங்காமல் அவரது எதிர்காலத்தையே நாசமாக்கியிருக்கின்றார்கள்.

இங்கே இருக்கும் இந்தியத் துணைத் தூதரகம் மிகமோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவா்களுடைய செயற்பாடுகளுக்கு செய்கைகளையும் பொறுக்கமுடியாதுள்ளது. வந்தாா்கள், இருந்தார்கள், போனாா்கள், அபிவிருத்தியை செய்தார்கள் என்று இல்லாம் எங்களை வழிநடத்துவதற்கும் மறைமுகமாக ஆக்கிரமிப்பதற்கும் முயன்றுகொண்டிருக்கின்றாா்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகததுக்குப் பொறுப்பானவா் அந்த மாதிரியான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார். மிகக் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றார்.

ஒரு தடவை அவர் என்னிடமே நேரடியாகப் பத்திரிகையில் அப்படி எழுதுகின்றாா்கள், இப்படி எழுதுகின்றாா்கள் என்று சொன்னாா். நடப்பதை மக்களுக்கு சொல்லவேண்டும் அதுதானே பத்திரிகையின் பணி.

இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து சுட்டார்கள். அதில் மருத்துவர்கள், தாதியர் எனப் பலர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதைப் பத்திரிகையில் செய்தியாக வெளியிடுகின்றார்கள். இங்குள்ள இந்தியத் தூதர் கேட்கின்றார், ஏன் அதனை மீண்டும் மீண்டும் போடுகின்றீா்கள் என்று.

வடக்கு, கிழக்கு
இந்தியாவுக்கா?

தெற்கில் சீனாவின் கை ஓங்குவதால் வடக்கு, கிழக்கை தங்கள் பிடியில் வைத்திருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்களோ தெரியாது. இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நிச்சயம் கவனத்தில் எடுத்து நடந்துகொள்ளவேண்டும்.

நடராஜன் இந்தியத் துணைத்தூதுவா் அல்லர். அவரது பதவியின் பெயா் அது அல்ல. அவரது பதவியின் பெயர் கொன்சூலர் ஜெனரல். அவர் ஓர் அதிகாரி. அவ்வளவே! அவருக்கு மேலே தூதரகத்தில் அதிகாரம் உள்ள பதவிகள் எத்தனையோ உள்ளன.

பத்திரிகை உண்மையை உண்மையாகச் சொல்லத்தான் வேண்டும். அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எந்தச் செய்தியைப் போடவேண்டும் எதைப் போடக்கூடாது என்று சொல்லக்கூடாது. வெளியிட்ட செய்தியில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அல்லது அது தொடர்பில் நீங்கள் ஏதாவது தீர்வைப் பெறவேண்டியிருக்கிறது என்றால் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறையிடுங்கள்.

பத்திரிகையில் உள்ள பிழையை சுட்டிக்காட்ட எல்லாருக்கும் உரிமை உள்ளது. அதற்காக அதன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த, அதனை மிரட்ட முனையக்கூடாது. எங்களிடம் பிழை இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதைச் சுட்டிக்காட்டுங்கள்.

இதற்காக நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள், இந்தியாவை வெறுப்பவர்கள் என்று அர்த்தம் அல்ல. இங்குள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளால் அவ்வாறான ஒரு நிலை வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகின்றோம். தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்பதில் எமக்கு கருத்து வேற்றுமை இல்லை. இந்தியா ஈழத் தமிழர்களின் பக்கம் இருக்கவேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால், புதுடில்லியால் இங்கு நியமிக்கப்படும் அதிகாரிகளோ இந்தியாவையும் ஈழத் தமிழர்களையும் பகைத்துக்கொள்ளச் செய்துவிடுவார்கள் போன்று உள்ளது” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv