பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம்
டெல்லி மேதாந்தா மருத்துவமனைக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் பாங்காக்கில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் வானில் பறந்த போது தீ பிடித்து எரிந்து பின்னர் தரையில் மோதிஉள்ளது. இதில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். இரு டாக்டர்கள், நர்ஸ் என நான்கு பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தினை “துரதிஷ்டவசமானது,” என கூறிஉள்ள மேதாந்தா மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் நரேஷ் த்ரேகன், விமானம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட நோயாளியை அழைத்துவர பாங்காக் சென்றது என கூறிஉள்ளார்.
காயம் அடைந்தவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பாங்காங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார். காயம் அடைந்தவர்களில் சைலேந்திரா, கோமல் ஆகிய இரண்டு மருத்துவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானி உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் விமானம் பிலாடஸ் பி.சி 12 டெல்லியில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. அது கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு, பாங்காக் நகருக்கு சென்றது. இந்நிலையில் நகோன் பதோம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, தரையில் மோதி தீப்பிடித்தது. 4 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேதாந்தா மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் விரைந்து உள்ளனர். காயம் அடைந்த டாக்டர்களின் குடும்பத்தாரும் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.
“நானும் பாங்காக் செல்ல உள்ளேன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகமான உதவிகளை செய்து உள்ளது,” என நரேஷ் த்ரேகன் கூறிஉள்ளார்.