இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த டெஸ்டில், 8 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதனை அவர் 54 டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.