இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுஷ்மா,
“முன்னைய இந்திய அரசுகள் அனைத்தும் தமிழர் விவகாரம் குறித்து பேச்சுக்களை மேற்கொண்டதுடன் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுப்பது குறித்தும் கவனம் செலுத்தின. இலங்கையில் தமிழர்களின் கரிசனைகளுக்குத் தீர்வு காணப்படாதது குறித்து நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம். இதன் காரணமாகவே புதிய தீர்மானம் கொண்டுவர நேர்ந்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்குள் பல விடயங்கள் நிறைவேற்றப்படாதன் காரணமாகவே இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கால எல்லையை நிர்ணயித்துள்ளது. இலங்கை அரசு அதற்குள் தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா. எதிர்பார்க்கின்றது. ஆக்கபூர்வமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய செயற்பாடுகள் மூலம் மாத்திரமே விடயங்களைச் சாதிக்க முடியும் என்ற அணுமுறையையே ஐ.நாவில் இந்தியா பின்பற்றுகின்றது.
தீர்மானத்துக்கு இணை அணுசரணை வழங்கிய நாடு என்ற வகையில் இலங்கை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை சாதிப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளது. ஒரு பக்கத்தில் நம்பிக்கையும் மற்றைய பக்கத்தில் ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் உள்ளன.
இலங்கையில் சில சாதகமான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்பதனால் அங்கு இடம்பெறும் விடயங்கள் குறித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இலங்கை ஒரு பல்லின, பல மொழி பேசும், தமிழ் மக்கள் உட்பட அனைத்து குடிமக்களும் சமத்துவத்துடன் வாழும் நாடு என்ற அதன் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் குறித்து இலங்கை அரசுடன் பேசப்படாத சந்திப்பு எதுவுமில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ள வேதனையை மோடி அரசு பகிர்ந்து கொள்கின்றது.
இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் நோக்கம். இதனை இரண்டு வழிகளில் சாதிக்கலாம். ஒன்று பலாத்காரமாக சாதிப்பது மற்றையது நட்பு நாடு என்ற பேச்சுக்கள் மூலம் இதனைச் சாதிக்கலாம்” என்று கூறினார்.