Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / அரசு விசாரணை செய்யத் தவறினால் ஐ.நாவே நேரில் களமிறங்கும்! – எச்சரிக்கின்றார் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை 

அரசு விசாரணை செய்யத் தவறினால் ஐ.நாவே நேரில் களமிறங்கும்! – எச்சரிக்கின்றார் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை 

“இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசு மறந்துபோனாலும் ஐ.நாவில் உள்ளோரும் அதிகாரிகளும் மறந்துபோகவில்லை. அவர்கள் அளவுக்கு மிஞ்சி அமைதி காக்கமாட்டார்கள். சந்தர்ப்பம் வரும்போது அவர்களே நேரடியாக இங்கு இறங்கும் கட்டம் வரும். ஐ.நா. அதிகாரிகளே வந்து போர்க்குற்றச்சாட்டுக் குறித்து ஆராயும் சூழ்நிலைகூட ஏற்படலாம்.”
– இவ்வாறு எச்சரித்திருக்கின்றார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வணக்கத்துக்குரிய ஆயர் ஜோஸப் கிங்ஸிலி  சுவாம்பிள்ளை.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமலாக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசு மறந்துபோனாலும், ஐ.நாவிலுள்ள மக்களும், அதிகாரிகளும் அதனை மறக்கவில்லை. அவர்கள் அனைத்து விடயங்களையும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர். சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசு செய்கின்றதா என்பதை அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களிலே ஐ.நா. சபையினர் தங்களால் பொறுமை காக்கும் அளவுக்குப் பொறுத்துக்கொண்டார்கள். ஆனால், அளவுக்கு மிஞ்சி அமைதி காக்கமாட்டார்கள். எனவே, சந்தர்ப்பம் ஏற்படும்போது அவர்களே நேரடியாகக் களமிறங்கும்  கட்டம் ஏற்படலாம். அரசு அக்கறையின்றிச் செயற்பட்டால் ஐ.நா. ஆணையாளர் வந்து போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு.
இன்று எம்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காதுவிட்டாலும் என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்கும். எமது மக்கள் நீதியைக் கேட்டிருக்கின்றார்கள். வாழ்வாதாரத்தைக் கேட்டிருக்கின்றார்கள். சாதாரண வாழ்வை வாழவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள்.
இப்படியான கேள்விகளுக்கு அரசு தகுந்த பதிலை வழங்கவேண்டும்; நீதியை வழங்கவேண்டும்.
இங்கு நடப்பவற்றைப்  பார்க்கும்போது எனது அபிப்பிராயத்தின்படி இவை ஒருபோதும் இங்கு நடவா. இலங்கை அரசால் நடக்கா. ஆனால், வேறு வழிகளில் நடக்கலாம்.
இலங்கையில் காணாமலாக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என்று கூறவில்லை. அக்கறை இருக்கின்றது. ஆனால், அவர்கள் அச்சமடைகின்றனர்.
பல்வேறு விடயங்களை அவர்கள் அறிந்துள்ளபோதும் சரியானவற்றைச் செய்யமுடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இவற்றில் அரசியல் கலந்துள்ளது” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv