நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. முதலில் இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது.
இந்த பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளுடனும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் கலந்துரையாட வந்துள்ளேன்.
அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றினைத்து அரசியலை நடாத்தியிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர், வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல்வாதிகள் கதைத்துள்ளதாக.
ஆனால் அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல்வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. அரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என.
எனவே, ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பில் இருந்து முதலில் ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தால், அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும். அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர்.
உத்தியோகத்தர்களுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து அது மேல் இருந்து கீழ் வரவேண்டும். இது தொட்பாக அரசியல்வாதிகள் கேள்வி கேட்க வேண்டும். ஆனால், ஜனாதிபதியும் பிரதமரும் இன்று கேட்காதவர்கள் போல இருக்கின்றனர். எனவே, இப்படியாயின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைவரும் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவ வேண்டும் .
மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் சொல்ல வேண்டியதல்ல. கிழக்கு ஆளுநர் ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்வந்து ஊடகங்களில் அறிக்கை கொடுத்து, யார் யார் அனுமதி தந்தது உதவி வழங்கியது என. ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் போல இந்த பிரச்சினையையும் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் போட முயற்சிக்கின்றனர்.
இந்த நேரத்தில் விரலை சுட்டி காட்டுவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு வரப்போவதில்லை. மஹிந்தவை திட்டிக் கொண்டு நாட்டு மக்களை பாதுகாக்க முடியாது, இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவர்கள் குற்றத்தை சொல்வதை விடுத்து, எங்கு பிழை செய்துள்ளனர் என தேடி சரி செய்து மக்களை பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் கூறுகின்றனர் 2 வருடத்துக்கு முன் புலனாய்வு பிரிவினர் அவருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக. எனவே, இது தொடர்பாக சட்டத்தை கையில் எடுப்பேன் என கூறும் முன் தனக்கு நீதியை சரியாக செய்வதாக இருந்தால் நல்லது என்றார்.