“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட முறையில் முதல்வரிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன எனவும், அதற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
புதியதொரு அரசமைப்பை உருவாக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசமைப்பு நிர்ணய சபையாக மாறியுள்ளது. இந்தச் சபையால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசமைப்பு வழிநடத்தல் குழுவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டன.
உபகுழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிநடத்தல் குழு இடைக்கால அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. எனினும், சில சொற்பதங்களால் அதை வெளியிடுவதில் இழுபறி நிலவிவருகின்றது.
புதிய அரசமைப்பு என்ற பதத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மஹிந்த அணியும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனவே, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெறுவதில் சிக்கல்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசமைப்புக்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களை வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசமைப்பையே விரும்புகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளன. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கு சிந்தனைகொண்ட உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டினாலேயே மூன்றில் இரண்டு பலத்தைப் பெறக்கூடிய சூழ்நிலையும் இருக்கின்றது.