ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகை லதா கூறியுள்ளார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் நேற்று மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை லதா கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் லதா கூறுகையில், ”ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. சொத்துக்காக பலர் புரளி பரப்புகின்றனர்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. யாரும் விமர்சிக்கவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார். எந்தத் தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்கமாட்டார்.
லதா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது நடிகை சச்சுவும், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் கீதா விஜயகுமாரும் உடனிருந்தனர்.