வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கை திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்திலேயே இன்று பயணிக்கின்றது.
இது கடலின் வடக்கு திசையில் இந்தியாவை நோக்கி பயணிப்பதால் இன்று இலங்கையிலும் இடிமின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்தார்.
நேற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வட அந்தமானில் ஏற்பட்டுள்ள குறைந்த வலுவான தாழமுக்கத்தினால் ஏற்பட்ட கடுங்காற்று இன்று இலங்கை திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்தில் வடக்கு நோக்கி மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது. வட- கிழக்கு பகுதியில் இருந்து 300 கிலோமீற்றர் தூரத்திலேயே அதிகளவான காற்று காணப்படுகின்றது. அதிலிருந்து கரையோர பகுதிகள் வரையில் 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்திலேயே காற்றின் வேகம் காணப்படும்.
இந்த காற்றின் வேகம் இடையிடையே மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த கடுங்காற்றினால் ஏற்படும் அதிகளவான தாக்கம் கடற்பரப்பிலேயே காணப்படுகின்றது.
மேலும் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மற்றும் வட அம்பாறை பிரதேசத்திலும் குறைந்த வலுவுடைய காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலைமை சில நேரங்களில் கடுமையாகவும் கூடும். சில நேரங்களில் தாக்கம் இல்லாமலும் இருக்கும் தன்மையுள்ளது.
இந்த காற்றின் வேகம் முதலில் குறைந்த அழுத்தம் கொண்டதாகவும் பின்னர் சற்று அழுத்தம் அதிகரித்து பின் கடும் நிலையை அடையும் வகையிலும் உள்ளது. இதனால் இது கடற்பரப்பில் மேலெழுந்து அலை உருவாகும் நிலை காணப்படுகின்றது. இதனால் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு.
இப்படியான ஒரு சம்பவமே 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதிவாகியது. அப்பொழுது பெய்த கடும் மழையால் அதிக மரணம் சம்பவித்தது. இதனால் இம்முறை பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடுங்காற்று இந்தியாவை தாக்கும் பட்சத்தில் இலங்கையிலிம் ஒரு வறட்சி நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு பூராகவும் ஒரு மந்தகரமான நிலைமையும் விட்டு விட்டு மழையும் இடி மின்னலுடன் கூடிய மழையும் எதிர்பார்க் கப்படுவதாலும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரையில் பொதுமக்கள் மிக அவதா னத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள் ளப்படுகின்றனர் என்றார்.