யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் ஏன் இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பபடுவதை அரசாங்கத்தினால் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இது இடம்பெற்றால் இந்த அதிகாரி வேண்டாமென்றால் அனைத்து படையினரையும் திருப்பி அனுப்புங்கள் என ஐநாவிற்கு தெரிவித்திருப்போம் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று ஜனாதிபதியோ பிரதமரோ எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியொருவர் ஜனாதிபதிக்கு எதிராக கொலை சதி முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க முடியாத பலவீனமான நிலையில் தற்போதைய அரசாங்கம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.