காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்
“இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் கண்டவர்கள் எவரும் இல்லை என்றும், காணாமல்போனவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபயவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்போது காணாமல்போனோர் ஆணைக்குழுவை நியமித்திருந்தார். அந்த ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்த பலர் தமது பிள்ளைகளை உறவுகளை இராணுவத்தினரிடம் நேரில் ஒப்படைத்தமை பற்றிச் சொல்லியிருந்தனர். ஒருவரல்ல, பலர் இவ்வாறு சாட்சியமளித்திருந்தனர்.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சரணடைந்தவர்களுக்கு அந்த முகாம்களின் இராணுவ அதிகாரிகள் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். அத்துடன், மிக முக்கியமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அவர் பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முடியாது. பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர் இப்போது இப்படிக் கூறுகின்றார்.
காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படும். அப்போது பல விடயங்கள் வெளிவரும். தற்போது ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டாபய சம்பந்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு விடயங்களாக உண்மை வெளிவரும்” – என்றார்.