தற்போதைய எதிரக்கட்சித் தலைவரிலும் பார்க்க தாம் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எளிய என்ற அமைப்பு இனவாத அமைப்பென அண்மையில் எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவர் நேர்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படுபவர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்த சூழல் காரணமாக அவரால் தமிழ் மக்களுக்கென எதனையும் செய்ய முடியவில்லை.
தாங்கள் இனவாதமாக செயற்படவில்லை. சம்பந்தனே இனவாதப் போக்கில் செயற்படுகின்றார்.
அவரிலும் பார்க்க பெரும் சேவைகளை தமிழ் மக்களுக்காக தாம் செய்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எளிய அமைப்பின் மூலம் தீவிரவாதத்தால் பிரிப்பதற்கு முயற்சிக்கப்பட்ட நாட்டை ஒருமித்த நாடாக அனைத்து மக்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் கௌரவமாக வாழ்வதற்கான உரிமை தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை.
இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் வாழ்வதற்கான உரிமையை பெற்றுள்ளனர் என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நாடு ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.