மன்னாரின் மூன்று இடங்களில் இந்துக்களின் கடவுள் சிலைகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. 3 சிலைகள் திருடப்பட்டுள் ளன. இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை நேற்றுக் கடைப்பிடித்த நிலையில் இந்த விசமச் செயல்கள் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ‘லிங்கேஸ்வரர்’ ஆலயத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளன.
மன்னார் – தாழ்வுபாடு பிரதன வீதி, கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் – தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.
நேற்று மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்த நிலையில் நடந்துள்ள இந்தச் சம்பங்கள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டனர்.