தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!
நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை.
அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.
அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க மட்டுமே. அவரிடமும் இன்னும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக பெரும் தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் முக்கிய தீர்மானமொன்று எட்டப்படுமெனவும் எதிர்பார்க்கபடுகின்றது.
இதேவேளை தங்களுடைய நிபந்தனைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்காவிடின், தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்படுமெனவும் அறியமுடிகின்றது.
அதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பு விசேட குழுவொன்று, இன்று காலை வந்திறங்கியுள்ள நிலையில், சம்பந்தனுக்கும் குறித்த குழுவிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னரே, இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அறியமுடிகின்றது.