பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம்
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் ஊழல்வாதிகள். எனவே தேர்தலில் போட்டியிடக் கூடாது. சிறைக்கு செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
பிரான்சியஸ்பிலன் கடந்த மாதம் ஊழல் விவகாரத்தில் சிக்கினார். விசாரணையில் அவரது மனைவிக்கும் ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர் ரூ.6 கோடியே 80 லட்சம் அளவு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வலதுசாரி வேட்பாளர் மெரைன் லிபென்னும் ரூ.3 கோடியே 40 லட்சம் வரை ஊழல் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்குற்றச்சாட்டை பிரான்சியஸ் பிலன் மறுத்துள்ளார்.