ஆப்பிரிக்க நாடான மாலியில் 2013-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலி மக்களை காப்பதிலும், அமைதி நிலவச்செய்வதிலும் அங்குள்ள ஐ.நா. அமைதிப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை அங்கு அமைதிப்படை வீரர்கள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு நைஜர் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள மெனாகா மற்றும் மோப்தி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேரும், மாலி ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கான மாலி நிரந்தர பிரதிநிதி முகமது சலே ஆன்னாதிப்பை நேரில் அழைத்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “பலியானவர்களின் குடும்பங்களுக்காக புர்கினோ பாசோ, மாலி, நைஜர் நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய அவர் தனது நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியில் நடந்துள்ள தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு சபையும் வன்மையாக கண்டித்துள்ளது. இதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்து தெரிவிக்கையில், “அமைதிப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டத்தின்படி போர்க்குற்றம் ஆகும். எந்தவொரு பயங்கரவாத செயலும் கிரிமினல் குற்றம்தான். அதை எந்தவொரு நோக்கத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது” என கூறியது