மஹிந்த அணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைய உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் நேரில் பேசியிருந்தார். இதனையடுத்து ஜனாதிபதி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விரைவில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியிலிருந்தும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் ஜனவரி மாத முதல் வாரத்தில் இணைய உத்தேசித்துள்ளனர்.
அவர்கள் எம்முடன் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அவர்களை வரவேற்க நாம் தயாராக இருக்கின்றோம். இந்த அரசு வலுவான அரசாகத் திகழும். அரசியல் நெருக்கடியால் சீரழிந்த நாட்டை நாம் கட்டியெழுப்போம்.
எவரையும் பழிவாங்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமையாது. நாட்டின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு எமது செயற்பாடுகள் அமையும்” என தெரிவித்துள்ளார்.