தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் வெகு குறைவாகவே உள்ளன. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் இதைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபையிலும், திருகோண மலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையிலும் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 27 சபைகளில் கூடிய ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2 சபைகளில் கூடிய ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2 சபைகளில் கூடிய ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு சபையில் கூடிய ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இந்த 32 சபைகளிலும் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குரிய தனிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஒன்றையொன்று ஆதரித்து செயற்படாத வரையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. பெரும்பான்மையான ஆசனங்கள் முன்னணிக் கட்சிகளைவிட ஏனைய கட்சிகளுக்கும் பெருமளவு சென்றுள்ளன.
பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முற்பட்டால், அந்த ஆட்சி சிறுபான்மை ஆட்சியாகவே அமையும். திட்டங்களைச் செயற்படுத்துதல் தொடக்கம் சபையை நடத்துதல் வரையில் எதனையும் செய்ய முடியாத நிலமை ஏற்படும். நிர்வாக முடக்கம் – பணிகளில் தேக்க நிலை ஏற்படும்.
உள்ளூராட்சி மன்றங்கள் திறம்பட இயங்குவதற்கு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சேர்ந்து இயங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகியுள்ளது. அவ்வாறு இயங்காவிட்டால், உள்ளூராட்சி சபைகளின் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும்.
மூன்று தடவைகள் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபையின் தலைவரை மாற்றவேண்டிய நிலமை ஏற்படும். பைகள் திறம்படச் செயற்பட முடியாத நிலமை ஏற்படும் என்பதுடன் சபைகள் கலைக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படலாம்.