இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனால் இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் பாவனை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. பெருந்தொகை இளைஞர்,யுவதிகள் பேஸ்புக் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய எடுக்கும் தீர்மானம் குறித்து பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.