முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-,
இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையவர்கள். இந்தச் செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயுதமேந்தி போராடினர்.
இன விடுதலைக்காக அதியுச்சம் பெற்ற ஆயுதப் பொறிமுறை அதிகளவான பொருள்சேதங்களையும் அதி உன்னதமான உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தியபின் நிறைவுற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால்மண் கூறி நிற்கின்ற செய்தியை சர்வதேசமும், இலங்கை அரசும், பன்னாட்டு அரசுறவியளாளர்களும் தாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை.
தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிய இனக் குழுமத்தை அதியுச்ச ஆயுத வன்முறையில் சிதைத்தழித்தால் அந்த இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தினை முடக்கிவிடலாம் என்கின்ற மோசமான சிந்தனையை எம்மை அழித்த தரப்புக்கள் உருவாக்கி வைத்திருப்பது இன நல்லிணக்கத்துக்கும் எதிர் காலச் சகவாழ்வுக்கும் இடையூறாகவே அமையும்.
அழிக்கப்படும் ஒரு நிலையில் தமிழர்கள் ஆயுதமேந்தியபோது ஜனநாயகம் மனித உரிமைகள் தொடர்பில் வலியுறுத்தி சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழர்கள் நலனில் அக்கறைகொண்ட சர்வதேச நாடுகள் இன்றும் அதே பிரச்சினைகள் எமை விட்டகலாது சூழ்ந்துள்ள நிலையில் ஆயுதங்களற்ற இராணுவச் சமநிலையற்ற தமிழர் தரப்பை எங்கள் நியாயப்பாடுகளில் கவனம்கொள்ளாதது கவலை அளிக்கின்றது.
ஒன்றாகுதலே இனத்தின் இன்றைய தேவை. வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும் அமைப்புக்களும் அரசியல்கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியாக ஒன்றுபட்டு செயலாற்ற வர வேண்டும் என்று அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
பேதங்கள் கோபங்கள் வியாக்கியானங்கள் கோட்பாடுகள் அனைத்தையும் இத்தினத்தில் மறவுங்கள். முள்ளிவாய்கால் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்காக போராளிகளும் அதன் மக்களும் தீக்குளித்த மண். விடுதலைக்கனவுடன் ஆயிரம்ஆயிரம் வேங்கைகளும் பல இலட்சக்கணக்கான மக்களும் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய மண். விடுதலை வேண்டி ஒன்றாக போராடியநாம் அந்த விடுதலையை வேண்டியவர்கள் நினைவில் கொள்ளப்படும் காலமதில் விலகிநிற்பதில் எவ்வித நியாயப்பாடுகளும் இல்லை.- என்றுள்ளது.