உலகின் மிக வயதான ராணி எலிசபெத்துக்கு 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இவரது முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. இவரது தந்தை மன்னர் 4ஆம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக முடி சூட்டப்பட்டார்.
இவருக்கு நேற்று 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார்.
உலகில் உள்ள மன்னர் மற்றும் ராணிகளில் இவரே மிக வயதானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் முடிசூட்டப்பட்டவர்களில் மிக நீண்ட நாட்கள் ராணியாக வலம் வருபவர்களில் இவரே முதலிடம் பெற்றுள்ளார். இன்று வரை இவர் 65 வருடங்கள் 75 நாட்களாக ராணியாக பதவி வகிக்கிறார்.
இவரது காலத்தில் இங்கிலாந்தில் 13 பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். தற்போது தெரசாமே பிரதமராக உள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை 12 அதிபர்கள் பதவி வகித்துள்ளனர். ஹெர்பெர்ட் ஹுவர் முதல் பாரக் ஒபாமாவரையிலான அதிபர்கள் இவரை சந்தித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரைவில் லண்டன் வந்து இவரை சந்திக்க உள்ளார்.
ராணி எலிசபெத் உலகில் உள்ள 106 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். 10 இலட்சத்து 60 ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளார்.
இவரது கணவர் பிலிப். இவரை 1947ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், என்ற 3 மகன்களும், இளவரசி ஆன்னி என்ற மகளும் உள்ளனர்.