ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ். பொதுநூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணப் பொதுநூலகம் சிங்கள வன்முறைக் கும்பல்களினால் மூட்டப்பட்ட செந்தணலில் பொசுங்கி நீறாகிப்போனது.
இந்தச் துயரச் சம்பவத்தைத் தாங்கமுடியாது யாழ்ப்பாண சம்பத்திரிசியார் கல்லூரி மாடியில் இருந்து அவதானித்த நடமாடும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட்ட பன்மொழிப் புலவர் வண.தாவீது அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தச் துயர்படிந்த – சோகம் நிறைந்த சம்பவங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
சிங்களக் கும்பல்களின் அராஜகச் செயலால் யாழ். பொது நூலகத்தில் இருந்த 97 ஆயிரம் அரிய நூல்களோடு பழைமை வாய்ந்த 1800 ஓலைச்சுவடிகளும் ஒன்று சேர்ந்து எரிந்து சாம்பலாகின.
இருபதாம் நூற்றாண்டில் யாழ்.பொதுநூலகம் தீயிட்டு அழிக்கப்பட்ட சம்பவம் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகின்றது.
நூலகம் எரிக்கப்பட்ட காலப்பகுதியில் யாழ். பொதுநூலகம் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
தமிழினத்தின் விடுதலைக்கான வரலாற்றில் யாழ். பொது நூலகம் தீயுடன் சாம்பலாகியது ஒரு சரித்திரக் குறியீடாகும்.