ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை வேட்பாளரை இறக்குமதி செய்யாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார்.
அதோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஐ. தே. கட்சியின் வேட்பாளர் ஒருவரே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சி வெளி நபர் ஒருவரை வேட்பாளராக களமிறக்காது என்றும்,24 ஆண்டுகளின் பின்னர் ஐ. தே. கட்சி வேட்பாளர் ஒருவரை இம்முறை கட்சியின் ஆதரவாளர்கள் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தம்மை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டார்கள் எனவும், அரசியலில் பிரவேசித்த காலம் முதல் கிடைத்ததை சரியாக செய்வதே தமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள அந்த தேர்தலில் தாம் நிச்சயமாக வெற்றியீட்டுவோம் என அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.