சென்னை பொன்னேரியில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படித்து முடித்த பின் மாணவர்கள் எதிர்கொள்ள போவது அரசியலையும், ஊழலையும் தான் என்று தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகி விடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.
மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு வேண்டும் என்று தெரிவித்த கமல்ஹாசன், மாணவர்களுக்கு தாம் அரசியலை புரியவைத்து விடுவேனோ? என்று பலர் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், திராவிடம் என்பது ஒரு இனத்தையும், ஒரு இடத்தையும் குறிக்கும் சொல் என்றும், நாடு தழுவிய திராவிடத்தை ஒழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றால், லோக் ஆயுக்தாதான் தமது முதல் கையெழுத்தாக இருக்கும் என்றும், கமல் தெரிவித்தார்.