உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று
‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு. மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.
தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று ரேகைக்கு பதில் ஒரு ரேகையுடன் இருப்பர்.
உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும், மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும். இவை, ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாக்கத்தில், தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும், 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக, 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.
இந்த குரோமோசோம் இணைவின்போது, தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும், 21-வது குரோமோசோமுடன், அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால், 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும், 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வு தான், டவுண் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத்தன்மை இருக்கும் என்பதால், தமிழில் இது, ‘மன நலிவு’ குறைபாடு எனப்படும்.
டி.என்.ஏ., பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம், குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம். ரத்தப் பரிசோதனையில், தாயின் ரத்த மாதிரி பரிசோதித்து அறியப்படும். மீயொலி பரிசோதனை மூலம், குழந்தையின் பின் கழுத்து பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால், குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.