Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தனிநபர் கொலைகள் தொடர்பில் கவலையில் டக்ளஸ்

தனிநபர் கொலைகள் தொடர்பில் கவலையில் டக்ளஸ்

நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1995 இல் யாழில் நடந்த சூரியக்கதிர் படை நடவடிக்கையின் போது பலநூறு பேர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

அப்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை திரட்டி காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தினோம்.

அது மட்டுமன்றி நாடாளுமன்றத்திலும் அதற்கெதிரான குரல்களை எழுப்பியவர்கள் நாங்கள். அதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்.

சர்வதேசத்தின் மத்தியிலும் அம்பலப்படுத்தினோம். அத்தகைய எமது போராட்டங்களின் மூலம் அன்று காணாமல் போதல் மற்றும் கைதுகளை முடிந்தளவு நாம் கட்டுப்படுத்தியிருந்தோம்.

அப்போதே அந்த போராட்டங்களுக்கு சக கட்சி தலைமைகளும் வலுச்சேர்த்திருந்தால், நீதி கூட கிடைத்திருக்கும். அது மட்டுமன்றி இன்று நடக்கும் காணாமல் போன உறவுகளுக்கான போராட்டங்களுக்கும் இதுவரை நீதி கிடைத்திருக்கும்.

அன்று நாம் நடத்திய போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு மாறாக தமது அரசியல் ஆதாயங்களுக்காக அதை திசை திருப்பி சென்றவர்களே, இன்று வந்து நெருப்புக்கண்ணீர் விடும் எமது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில், யாழ் கிருசாந்தி, புங்குடுதீவு சாரதாம்பாள், மற்றும் கிழக்கில் கோணேஸ்வரி என தொடர்ந்து பாலியல் வன்புணர்வுகளும் படுகொலைகளும் நடந்தேறிய போது, அவைகளுக்கு எதிராக இந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அவைகளை அம்பலப்படுத்தியவர்களும் தொடர் பாலியல் வல்லுறவு படுகொலைகளை தடுத்து நிறுத்தியவர்கள் நாங்கள்.

இவைகளுக்கு எதிராக நாம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த போது, தவிர்க்க முடியாமல் பங்கிற்கு தாமும் குரல் கொடுப்பதுபோல் இந்த சபையில் குரல் எழுப்பியவர்கள், தமது உரை முடிந்ததுதும், எந்த படையினரை சுட்டிக்காட்டி தமது உரையை நடத்தினார்களோ, அதே படைகளை வழிநடத்தும் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுடன் நாடாளுமன்ற உணவு விடுதியில் கைகுலுக்கி, தாம் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் இன்றும் இந்த சபையில் சாத்தான்கள் போல் வேதம் ஓதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். காணாமல் போதல்களுக்கு காரணமானவர்களை சுட்டிக்காட்டுவதற்கு மாறாக, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக அடுத்தவர்கள் மீது தொடர்ந்தும் பழிகளை சுமத்தி வந்ததாலுமே, எமது மண்ணில் உண்மையாகவே காணாமல் ஆக்கியவர்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். காணாமல் போதல்கள் நீடித்த துயர்களாகவும் இருந்து வந்திருக்கிறது.

கடந்த கால யுத்த சூழலை முன்வைத்து இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.” என கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv