சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு
சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் பழைய டமாஸ்கஸ் நகரில் இன்று தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். பாப் அல்-சாகிர் பகுதியில் பயணிகள் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அந்த பஸ் கடுமையாக சேதம் அடைந்து, அதில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு உடல் உறுப்புகள் சிதைந்து பலியாகினர்.
அடுத்த சில நிமிடங்களில், அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
புனிதப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.